|
வியாழக்கிழமை, 6, ஆகஸ்ட் 2009 (17:48 IST)
நடக்கவிருக்கும் இடைத்தேர்தலில் தி.மு.க.வும், கம்யூனிஸ்டுகளும், தே.மு.தி.க.வும், பா.ஜ.க.வும் மோதுகின்றன. பிரதான எதிர்க்கட்சியான அண்ணா தி.மு.க. இந்தத் தேர்தலைப் புறக்கணித்துவிட்டதால் தே.மு.தி.கவின் ஓட்டு சதவிகிதம் அதிகரிக்கும் என்று பேசப்படுகிறது. இந்த நிலையில், வரும் புதன்கிழமை முதல் தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக சூறாவளிச் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளத் தயாராகிவரும் விஜயகாந்தை நாம் சந்தித்துப் பேசினோம்.
ஷநாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும்| என்று முன்பு முடிவு எடுத்ததே நீங்கள்தான். ஆனால், இம்முறை இடைத்தேர்தலில் எந்த வித எதிர்ப்போ, தயக்கமோ இல்லாமல் களமிறங்கி விட்டீர்களே?
'கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, இலங்கையில் பெரும் போர் நடந்து அங்குள்ள தமிழினமே அழிந்து கொண்டிருந்தது. அதைக் கண்டித்து, ஷஇங்குள்ள பிரதான கட்சிகள் அனைத்துமே தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும்| என்று குரல் கொடுத்தேன். ஆனால், என் கோரிக்கையை இங்குள்ளவர்கள் யாரும் பொருட்படுத்தவில்லை. இந்தநிலையில், இப்போது சில கட்சிகள் சுயநலத்திற்காக இடைத்தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்கிறார்கள். அவர்கள் எண்ணமும், நோக்கமும் தவறு என்பதை எல்லா மக்களும் புரிந்து வைத்திருக்கின்றனர். ஆனால், ஒரு கட்சி என்ற முறையில் ஜனநாயகக் கடமை ஆற்றுவதற்குத் தேர்தலில் பங்கு கொள்வதுதான் சரியானது என்பதால் களமிறங்கி விட்டேன்."
அப்படியானால், அண்ணா தி.மு.க. இந்தத் தேர்தலைப் புறக்கணிப்பது தவறு என்கீறீர்களா?
'அது அவர்கள் கட்சியின் உள்விவகாரம், அதில் நான் தலையிட விரும்பவில்லை. அப்படிப் பார்த்தால் ஒருமுறை சாத்தான்குளத்தில் நடந்த இடைத்தேர்தலைக்கூட தி.மு.க. புறக்கணித்தது. ஆனால், இப்போது புறக்கணிப்பதற்குக் காரணம், தனிப்பட்ட துவேஸம் என்பதுதான் வேதனை."
இந்தத் தேர்தல் தே.மு.தி.க. விற்குப் புதிய நம்பிக்கையைத் தரும் எனறு நினைக்கிறீர்களா?
'மக்கள் நம்பிக்கை வைத்தால் எதிலும் முன்னேற முடியும். அந்த நம்பிக்கையை நோக்கித்தான் எனது கட்சி முன்னேறிக் கொண்டிருக்கிறது."
இந்தத் தேர்தலை அண்ணா தி.மு.க. புறக்கணிப்பதன்மூலம் தே.மு.தி.க. லாபம் அடையும் என்கிறார்களே?
'மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று ஒரு போதும் நான் யோசிக்க மாட்டேன். எங்கள் உழைப்பிற்கு ஏற்ற ஊதியத்தை மக்கள் தருவார்கள். மறுபடியும் சொல்வதென்றால், ஒரு ஜனநாயக நாட்டில் ஒவ்வொரு கட்சியும் தேர்தலைச் சந்திக்க வேண்டியது கட்டாயம்."
இந்தமுறையாவது கம்யூனிஸ்டுகளுடன் இணைந்து தே.மு.தி.க. போட்டியிட்டிருக்கலாம் என்கிறார்களே?
'நான் நன்றாக இருந்த என் கட்சியை வழி நடத்துகிறேன். அதனால், என்னிடம் கேட்ட இதே கேள்வியை கம்யூனிஸ்டுகளிடம் கேளுங்கள்."
சரி.. கம்யூனிஸ்டுகள் சார்பாக யாராவது உங்களிடம் பேசினார்களா?
'நிச்சயமாக இல்லை. அப்படி எதாவது நடந்தால் உங்களுக்கு தெரியாமல் போய்விடாது."
'இடைத்தேர்தலை நடத்தாமல் தி.மு.க.ஜெயித்துவிட்டதாக அறிவித்துவிடலாம்| என்று ஜெயலலிதா கூறியிருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
'அது அவரது சொந்த கருத்து. இவர் போலவே அழகிரியும் உங்கள் பத்திரிக்கையில் ஒரு கருத்தைச் சொல்லியிருக்கிறார். எதிர்வரும் பொதுத் தேர்தலையும் அண்ணா தி.மு.க. புறக்கணிக்குமா? என்ற ரீதியில் அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார். ஆட்சியில் இருந்த கட்சிகள் எல்லாம் பணபலம், அதிகாரபலம், அடியாட்கள் பலத்துடன்தான் ஒவ்வொரு தேர்தலையும் சந்திக்கிறார்கள். அதைச் சமாளிக்க முடியும்| என்ற துணிச்சலில் தான் நாங்கள் களமிறங்குகிறோம். எங்களிடம் மக்கள் பலம்தான் இருக்கிறது. இதற்கிடையில், உண்மையைச் சொல்லப் போனால், எம்.ஜி.ஆருக்குப் பிறகு இங்குள்ள அரசியல் அரசியலாக இல்லை. இதெ ஜெயலலிதா முன்பு காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி இடைத்தேர்தலில் செய்த உத்தியைத்தான் இப்போது தி.மு.க.வினர் செய்கிறார்கள். அதை மக்களிடம் எடுத்துச் சொல்லி விழிப்புணர்வையும், புரட்சியையும் ஏற்படுத்த முயல் வேண்டும். அதைவிட்டுவிட்டு ஏனோதானோவென்று யோசனை சொல்வதை நான் விரும்பவில்லை."
இடைத்தேர்தலில் எந்த விவகாரத்தை முன்னிலைப்படுத்தி பிரசாரம் செய்யத் திட்டமிட்டிருக்கிறீர்கள்?
'அரசியல் மேடைகளில் திட்டமிட்டுப் பேசும் பழக்கம் என்னிடம் கிடையாது. பொதுவாக, அந்தந்த ஊர் மக்களின் பிரச்னையை பிரதானப்படுத்திப் பேசுவதுதான் என் வழக்கம். மேலும், இந்தத் தேர்தலில் தி,மு.க.வினரின் அக்கிரமங்களை முன்னிலைப்படுத்திப் பேசுவேன். இவர்கள் பணபலம், ஆட்சிபலம், அதிகாரபலத்தை வைத்துக்கொண்டு துஸ்பிரயோகம் செய்வதை எடுத்துச் சொல்வேன். இவர்களின் அடாவடித்தனம், ரவுடித்தனத்தால் மக்கள் பாதிக்கப்படுவதை அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியது என் கடமை."
இப்போதைய தி.மு.க. அரசு மீதான மக்கள் எதிர்ப்புணர்வு மிகவும் குறைந்துள்ளது என்கிறார்களே?
'மிகத் தவறான தகவல், பத்திரிக்கைகளுக்கு விளம்பரம் கொடுத்து இப்படிப் பேச வைக்கிறார்கள் என்று நினைக்கிறேன். உதாரணத்திற்கு, தே.மு.தி.க. அலுவலகம் இருக்கும் கோயம்பேடு பகுதியை ஒருமுறை சுற்றிப் பாருங்கள். சுகாதாரக்கேட்டாலும், மோசமான சாலைகளாலும், போக்குவரத்து நெரிசலாலும் மக்கள் சிக்கிச் சின்னாபின்னமாகித் தவிக்கும் நிலையைப் பார்த்து கண்ணீர் வடிப்பீர்கள். இதையெல்லாம் சரி செய்ய வேண்டிய அரசு மீது மக்களுக்கு எதிர்ப்புணர்வு இல்லை என்று சொன்னால், நீங்கள் காமெடியாகப் பேசுகிறீர்கள் என்றதான் சொல்வேன்."
சரி.. இதே போக்கில் போய் 2011லும் தே.மு.தி.க தனித்துத்தான் போடடியிடுமா? அல்லது அப்போதாவது கூட்டணிக்கு வாய்ப்புள்ளதா?
' அது அப்போது எடுக்க வேண்டிய முடிவு. அந்த நேரத்தில் தே.மு.தி.க.விடம் பல் கட்சிகளும் சேர்ந்து கொள்ளக்கூடிய சந்தர்ப்பமும் ஏற்படலாம். தினசரி அரசியலில் மாற்றங்கள் ஏற்பட்டுவரும் சூழ்நிலையில், நாளை என்ன நடக்கும் என்று யாராலும் கணிக்க முடியாது."
தி.மு.க.வின் மூன்றரை ஆண்டுகால ஆட்சிக்கு நீங்கள் எவ்வளவு மார்க் போடுவீர்கள்?
'ஒரு மதிப்பெண்கூட போட முடியாது. மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாத தி.மு.க. அரசுக்குப் புஜ்ஜியம் மதிப்பெண்தான் கொடுப்பேன். இந்த அரசு ஏதாவது நல்ல காரியம் செய்திருக்கிறதா என்று நீங்களே சொல்லுங்கள்."
ஏழை மக்களுக்குக் காப்பீட்டுத் திட்டத்தை தற்போது கலைஞர் அறிவித்திருப்பது நல்ல திட்டம் இல்லையா?
'சீனாவில் அமல்படுத்தப்பட்ட இந்தக் காப்பீட்டுத் திட்டத்தை நமது நாட்டிலும் அறிமுகப்படுத்த வேண்டும் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான்தான் சட்டமன்றத்தில் பேசினேன். அதை இவர்கள் இப்போத அமல்படுத்த முயல்கிறார்கள். அதிலும், ஏகப்பட்ட குளறுபடியும், தில்லுமுல்லுகளும் நடப்பதாகச் செய்திகள் வருகின்றன. அதனால், இது ஏழைகளுக்குப் பயன்படுமா? என்பது போகப் போகத்தான் தெரியும்."
டாக்டர் பட்டம் வாங்கியுள்ள துணை முதல்வர் ஸ்டாலினின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது?
'ஏற்கனவே ஒர முதலவரால் தமிழகம் படும் அவஸ்தையைத் தாங்க முடியவில்லை. இந்தநிலையில, ஷதுணை முதல்வர்| என்ற பெயரில் இன்னொரு அவஸ்தை வந்துள்ளது. கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவி செய்வதாக அறிவித்தார்களேயொழிய, இரண்டு முதல்வர்களும் ஒரு கர்ப்பிணிக்குக் கூட உரிய உதவியைச் செய்யவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் பலரை நேரில் வரவழைத்து என்னால் நிரூப்பிக்க முடியும். ஆக, அப்பா மாதிரி பிள்ளையும் வேஸ்ட் என்றுதான் சொல்வேன்."
தி.மு.க. அரசில் பலம் வாய்ந்த துறையை நிர்வகித்து வந்த துரைமுருகனை துறை மாற்றம் செய்திருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
'இதுவும் முழுக்கமுழுக்க அவர்களது உள்கட்சி விவகாரம்தான் என்றாலும், ஷகமிஸன்| விவகாரத்தால்தான் மாற்றப்பட்டுள்ளார் என்கிறார்கள். இதில் உண்மையிருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. மேலும், அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, பொன்முடி போன்றவர்கள் எல்லாம் கலைஞருடன் ஒரே காரில் உட்கார்ந்து போக ஆசைப்படுகிறார்களே தவிர, மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் துளிகூட அவர்களுக்குக் கிடையாது."
நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வியடைந்த பா.ம.க. பற்றி இதுவரை நீங்கள் எந்தக் கருத்தையும் கூறவில்லையே?
'மக்களால் மறக்கடிக்கப்பட்ட கட்சியைப் பற்றி என்னிடம் பேசாதீர்கள். அவர்களைப் பற்றி நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை."
சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் சரிவர நீங்கள் கலந்து கொள்ளவில்லையே? ஏன்?
' இதே கேள்வியை கலைஞரிடம் போய்க் கேளுங்கள். அவர்கூட ஐந்தாண்டு காலம் சட்டமன்றத்திற்கே போகாமல் எம்.எல்.ஏ.வாக இருந்தாரே. ஆனால், நான் பலமுறை சட்டமன்றக் கூட்டத் தொடரில் கலந்து கொண்டு பல்வேறு கேள்விகளையும், குறைகளையும் கூறியிருக்கிறேன். ஆனால் அவைகளை இந்த அரசு பொருட்படுத்தவே இல்லை. அப்படியிருக்கையில், அவர்கள் பேசுவதை உட்கார்ந்து கேட்பதற்கு அங்கு போகத்தான் வேண்டுமா? என்று நினைத்து இப்போதெல்லாம் போவதில்லை. அதுமட்டுமின்றி ஒரு எம்.எல்.ஏ. என்ற முறையில் என் விருத்தாசலம் தொகுதி மக்களுக்காக ஏகப்பட்ட கம்பி தடுப்புக் சுவர் தயார் செய்து அதைக் கொடுக்க பல் வழிகளில் முயன்று அதைக் கொடுக்க பல வழிகளில் முயன்று வருகிறேன். ஆனால், அவைகளை வைக்கக் கூட தி.மு.க. அரசு அனுமதி மறுக்கிறது."
இதுவரை தே.மு.தி.க. நான்கைந்து தேர்தல்களைச் சந்தித்துவிட்டது. ஆனாலும், பர்கூரில் வேட்புமனு தாக்கல் செய்வதில் குளறுபடி செய்தது ஏன்?
'இது சிலரின் திட்டமிட்ட சதியால் ஏற்பட்ட கோளாறு. இப்போது போட்டியிடும் வேட்பாளருக்கு ஏற்கனவே போட்டியிட்ட அனுபவம் உண்டு. அப்படியிருக்வீயில் தவறான முறையில் வேட்புமனுவைத் தவறான முறையில் வேட்புமனுவைத் தாக்கல் செய்வாரா? எப்படியோ, தேர்தல் கமிஸன் வரை போராடி, இந்தச் சதியை முறியடித்துவிட்டதில் நிம்மதியாக இருக்கிறது.
உங்களைத் தொடர்ந்து நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கப் போவது பற்றி என்ன சொல்கிறீர்கள்?
'ரஜினி தொடங்கி யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி தொடங்கலாம் என்று அப்போதிருந்தே சொல்லிக் கொண்டிருக்கிறேன். அப்படி தொடங்குபவர்களை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா? என்பதைக் காலம்தான் தீர்மானிக்கும்."
இறுதியாக ஒரு கேள்வி. நீங்கள் இந்தக் கட்சியை ஆரம்பித்ததால் அடைந்தது என்ன? இழந்தது என்ன?
'தே.மு.தி.க. என்ற ஒரு கட்சியை அடைந்துள்ளேன். என்னை வளர்த்து வருமானமும் தந்த சினமாவை ஓரளவு இழந்துள்ளேன்!" என்றதோடு பேட்டியை முடித்துக்கொண்டு இடைத்தேர்தல் பிரசாரத்திற்குக் கிளம்ப ஆயத்தமானார் விஜயகாந்த்.
- நன்றி: 09-08-2009 குமுதம் ரிப்போர்ட்டர்.
|