அச்சமுண்டு... அச்சமுண்டு...
த்ரில்லர் படம் ஒன்றை எடுக்க முயற்சி செய்திருக்கிறார்கள். பிரசன்னாவும், சினேகாவும் அமெரிக்காவில் வேலை நிமித்தம் வாழும் தமிழ்த் தம்பதி. அவர்களுக்கு ரித்திகா எனும் அழகான பெண்குழந்தை. பிரசன்னா வீட்டுக்குப் பெயிண்ட் அடிக்க வருகிற ஒருவன், சிறுவர், சிறுமிகளைப் பாலியல் பலாத்காரம் செய்யும் சைக்கோ. அவன் கண்ணில் சிறுமி ரித்திகா படுகிறாள். சிறுமியைக் குறிவைக்கும் சைக்கோ காமுகனிடம் இருந்து குழந்தையைக் காப்பாற்றுகிறார்களா என்பதே க்ளைமாக்ஸ்.
வேலை நிமித்தமாக வெளிநாடுகளில் வாழும் தம்பதிகளை பிரசன்னாவும், சினேகாவும் அழகாக பிரதிபலிக்கிறார்கள். இளம் மனைவியாக சினேகா கச்சிதமாக பொருந்துகிறார்.படத்தில் வந்து போனால் போதுமென்று பிரசன்னாவிடம் சொல்லியிருப்பார்கள் போல. கொஞ்சம் இறுக்கமான முகத்துடன் அவரும் அடிக்கடி வந்து போகிறார். இன்னொரு முக்கிய கதாபாத்திரமாக அமெரிக்கரான, ‘ஜான் செஹா’ நடித்திருக்கிறார். குழந்தைகளைக் கடத்தி கொலை செய்கிற கேரக்டரில் இயல்பாக நடித்திருக்கிறார். அவரை சைக்கோவாக காட்டவேண்டும் என்று இயக்குனர் முடிவெடுத்துவிட்டதால், கோக்குமாக எதை எதையோ செய்கிறார். மணலை சுடவைத்து அதில் கைகள் காயமாகிற அளவு குத்துகிறார்.தலைகீழாக நிற்கிறார். பலவிதமான உடற்பயிற்சிகள் செய்கிறார். த்ரில்லர் என்றால் சம்பந்தமில்லாத காட்சிகள் வந்தாக வேண்டுமென்கிற விதிமுறையை, அப்படியே காப்பியடித்திருக்கிறார்கள்.
அமெரிக்காவில் சாப்ட்வேர் வேலைப் பார்க்கும் அருண் வைத்தியநாதன் படத்தை தயாரித்து இயக்கியிருக்கிறார். வெளிநாடு வாழ் தம்பதிகளின் வாழ்க்கை துல்லியமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பாலியல் துன்புறுத்தல் என்கிற கதையை, லைசென்ஸாக பயன்படுத்தி ஆபாச அருவெறுப்புகள் இல்லாமல் படம் எடுத்திருப்பதைப் பாராட்டியே தீரவேண்டும். கனவுப்பாட்டோ, சாகச சண்டையோ இல்லாமல் படமெடுக்கிற தைரியம் பெரிய இயக்குநர்களுக்குகூட இங்கு இல்லை. அந்தவகையில் இதுபோன்ற முயற்சிகள் பாராட்டப்படவேண்டியவை.
அலட்டிக்கொள்ளாத கதையும், குறைந்த கதாபாத்திரங்களும், பெரும்பாலும் ஒரே லொக்கேஷனும் படத்திற்கு ப்ளஸாகியிருக்க வேண்டியவை. எதிலுமே நேர்த்தியில்லாமல் போனதால் மைனசாகிவிட்டது. த்ரில்லராக படத்தை எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தவர், படம் பார்ப்பவர்கள் அதிகம் பயந்துவிடக்கூடாது என்றும் முடிவுசெய்துவிட்டார். வில்லன் கதாநாயகனின் குழந்தையைக் குறிவைப்பதுதான் படத்தின் மையப்புள்ளி என்று வைத்துக்கொண்டால், இது நடக்கவே இடைவேளை வந்துவிடுகிறது. அதற்குப் பிறகும் மிக சாவதானமாக நகர்ந்து க்ளைமாக்ஸை அடைகிறது. ஒரு விறுவிறு காட்சி வந்தால், அடுத்த விறுவிறுப்பைப் பார்க்க பல காட்சிகள் பொறுமை காட்டவேண்டி இருக்கிறது. படம் முழுக்க டாக்குமென்டரிதனம். (அருண் வைத்தியநாதன் பல டாக்குமென்டரிகள் எடுத்தவராம்.)
படத்திற்கு பெரும் செலவை வைக்கும் பிலிம் ரோலை தவிர்த்துவிட்டு, டிஜிட்டல் முறையிலான ரெட் கேமராவைப் பயன்படுத்தி ஒளிப்பதிவு செய்திருக்கிற முதல் தமிழ்ப்படம். வரவேற்க வேண்டிய நல்ல தொழில்நுட்பம். உறுத்தல் இல்லாமல் படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். எடிட்டரின் கத்திரிக்கு கூர்மை போதவில்லை. பின்னணி இசையில் விறுவிறுப்பை காட்டுகிறார் கார்த்திக்ராஜா. பல இடங்களில் இசையில்லாமல் இருக்கிறது. சில காட்சிகளில் அந்த மௌனம் த்ரில்லாக இருந்தால்,பல இடங்களில் வாசிக்க மறந்துவிட்டதாகவே நினைக்கத் தோன்றுகிறது.
உலகம் முழுவதும் பாலியல் துன்பங்களுக்கு ஆளாகும் சிறுவர், சிறுமிகளின் அவலத்தை பதிவு செய்ய முயற்சியாக படத்தின் இறுதியில் சொல்கிறார்கள். ஒரு த்ரில்லர் படமெடுக்க அந்தக் கருவை தேர்ந்தெடுத்துக்கொண்ட தோற்றமே படம் முழுக்க மேலிடுகிறது.
அச்சமுண்டு... அச்சமுண்டு... பெயரில் மட்டும்!
- தெனாலி விமர்சன குழு